“100 அடிக்கு சுனாமி + மெகா நிலநடுக்கம்..” 2.31 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்

டோக்கியோ: ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் இப்போது மெகா நிலநடுக்கம் குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது ஜப்பானின் நங்காய் பள்ளத்தாக்கு பகுதியில் தான் மெகா நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதைத் தொடர்ந்து மிகப் பெரிய சுனாமி ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஜப்பான் ரிங் ஆஃப் பையர் என்ற பகுதியில் இருக்கிறது. பூமியின் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்படும் பகுதியாக இது இருக்கிறது. உலகின் ஏற்படும் 90% பூகம்பங்கள் இங்கு தான் ஏற்படுகிறது.

மெகா நிலநடுக்கம்: அங்குள்ள ஹியுகனாடா கடலில் சமீபத்தில் தான் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில், அங்கே மற்றொரு மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மெகா நிலநடுக்கங்கள் மிகப் பெரிய சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்பதே இப்போது அங்குள்ள பொதுமக்களின் கவலையாக இருக்கிறது.

ஷிசுவோகாவிலிருந்து மியாசாகி வரையிலான 700 கிமீ நீளமுள்ள நன்காய் பகுதி என்பது பிலிப்பைன்ஸ் கடல் தட்டு இருக்கும் ஒரு டெக்டோனிக் ஹாட்ஸ்பாட் பகுதியாகும். இதன் காரணமாக அங்கே அழுத்தம் ஏற்பட்டு ஒவ்வொரு 100 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா பூகம்பங்களுக்கு வழிவகுக்கிறது. இந்த கணக்கின்படி பார்த்தால் அடுத்த 30 ஆண்டுகளில் 8-9 ரிக்டர் அளவில் மெகா நிலநடுக்கம் ஏற்பட 70- 80% வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

100 அடிக்கு சுனாமி: அப்பகுதியில் மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால், அதைத் தொடர்ந்து 30 மீட்டர் உயரத்தில் அதாவது 100 அடி உயரத்தில் சுனாமி ஏற்படும் என்றும் இதனால் அங்கே கடலோரப் பகுதிகள் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கிறார்கள். பொதுவாகச் சுனாமி ஏற்படும் போது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் செல்ல கொஞ்ச நேரம் கிடைக்கும். ஆனால், இந்த மெகா சுனாமி ஏற்படும் போது மக்கள் வெளியேற சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் அரசு பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து மக்கள் எந்தளவுக்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது குறித்த எச்சரிக்கையை வழங்கும். அதன்படி இப்போது மக்களுக்கு “மெகா த்ரஸ்ட் பூகம்ப அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வல்லுநர்கள் எச்சரிக்கை: அடுத்த ஒரு வாரத்திற்குள் மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சில வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இருப்பினும், நிலநடுக்கமும் சரி, சுனாமியும் சரி டெக்டானிக் தகடுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் நிகழ்கிறது. இதனால் அவற்றை சில நிமிடங்களுக்கு முன்பு மட்டுமே கணிக்க முடியும். எனவே, அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த மெகா பூகம்பம் ஏற்படும் என்பது உறுதியில்லை என்றாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடனடி மெகா நிலநடுக்கம் குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், பிராந்தியத்தின் நில அதிர்வு வரலாற்றைக் கருத்தில் கொண்டு தயார்நிலையின் முக்கியத்துவத்தை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here