சுங்கைப்பட்டானி: காணாமல் போனவர்கள் குறித்து புகார் அளிக்கும் போது சம்பந்தப்பட்டவர்கள் தெளிவான மற்றும் விரிவான தகவல்களை அளிக்க வேண்டும். கெடா காவல்துறைத் தலைவர் ஃபிசோல் சலே கூறுகையில், காவல் துறையினர் திறம்பட செயலாற்ற புகார் அளிப்பவர்கள் நேர்மையாகவும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்றார்.
ஒரு புகாரினை பெற நாங்கள் இனி 24 மணிநேரம் காத்திருக்க மாட்டோம். ஆனால் அறிக்கை வழங்குபவர்கள் உண்மையாக இருப்பது முக்கியம். சில சமயங்களில் தனிப்பட்ட பிரச்சினைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் காரணமாக காணாமல் போகிறார்கள்… கடத்தல்களால் அல்ல என்று இன்று கெடா நகர மண்டபத்தின் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு அவர் கூறினார்.
காணாமல் போனோர் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் போலீசார் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், வழக்குகள் சோகமாக முடிவதைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாகவும் ஃபிசோல் கூறினார். தவறான புகார்கள் விசாரணையை சிக்கலாக்கும் என்பதால், பொதுமக்கள் நியாயமாகவும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கெடாவில் காணாமல் போனோர் புகார்கள் அதிகரித்திருந்தாலும், அதில் பணம் கேட்டு மிரட்டல்கள் இல்லை என்றார். போலீசார் விழிப்புடன் இருந்து, தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.