சடாவோ எல்லைச் சாவடியில் தாய்லாந்து சுங்கத்துறை அதிரடி: வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்ட RM870,000 பணம் பறிமுதல்!

கோலாலம்பூர்:

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சடாவோ எல்லைச் சோதனைச் சாவடி வழியாகத் தாய்லாந்திற்குள் நுழைந்த வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த RM870,000 மதிப்பிலான மலேசியப் பணத்தைத் தாய்லாந்து சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இரகசியத் தகவல் மற்றும் உளவுத்துறை விசாரணையின் அடிப்படையில் இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாகவும், இதில் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தாய்லாந்து பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சடாவோ சுங்கத்துறை மற்றும் மண்டலம் 4 சுங்கக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இணைந்து தாய்லாந்து பதிவு பெற்ற அந்த வாகனத்தை தீவிரச் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் தொகை ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

“கைப்பற்றப்பட்ட மலேசியப் பணத்தின் மதிப்பு சுமார் 7.1 மில்லியன் பாட் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 2017-ஆம் ஆண்டு தாய்லாந்து சுங்கத்துறைச் சட்டத்தின் பிரிவு 166-இன் கீழ் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” தாய்லாந்து பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக அதே சட்டத்தின் பிரிவு 242 மற்றும் பிரிவு 252 ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வாய்ப்புள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வழக்குச் சடாவோ சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வளவு பெரிய தொகையைத் தாய்லாந்திற்குள் கொண்டு வந்ததன் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here