காந்திநகர்: குஜராத்தில் பாட்டு பாடிக்கொண்டிருந்தபோது பெண் ஒருவர் திடீரென்று சரிந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சமீப காலமாக இளம் வயதினர் தொடங்கி நடுத்தர வயதினர் வரை பலர், திடீர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல் பாகத்தில் மிக முக்கியமானது இதயம். உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை கொண்டு செல்வது இதயம்தான். ஆனால், இதயத்தின் பணிக்கு கொழுப்பு தடையை ஏற்படுத்துகிறது.மாறிவரும் வேலை சூழல், அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ளப்பட்ட வாழ்க்கை சூழல், உணவு பழக்கம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை உடலில் கொழுப்புகளை அதிக அளவில் தேக்கமடைய செய்கின்றன.
இந்த கொழுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நரம்புகளில் தேக்கமடையும்போது, ரத்த ஓட்டத்திற்கு தடையாக இருக்கிறது. ரத்தம் சீராக செல்லப்படாதபோது மாரடைப்பு ஏற்படுகிறது. அதாவது, உடலின் மற்ற பாகங்களிலிருந்து இதயத்திற்கு வரும் ரத்தத்தை கொழுப்பு அடைத்துக்கொள்கிறது. வழக்கமாக மாரடைப்பு வரும்போது கடுமையான வலி, வாந்தி, கை செயல்படாமல் இருத்தல், அதிக வியர்வை போன்றவை ஏற்படுகின்றன.
ஆனால், சமீபத்திய மாரடைப்பு செய்திகளில் இந்த அறிகுறிகளை பார்க்க முடிவதில்லை. குஜராத்திலும் இப்படியான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. சுதந்திர தினத்தன்று பெண் ஒருவர் நிகழ்ச்சியில் பாட்டுப்பாடிக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இப்படியான சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு அதீத உடல் செயல்பாடும், மன அழுத்தமும் காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சில நேரங்களில் மரபணு குறைபாடும் இந்த வகை மாரடைப்புக்கு காரணமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.