புதுடில்லி:
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது.
இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இது குறித்து சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுதும் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் சார்பிலும் நாடு தழுவிய போராட்டம் நடந்து வருகிறது. புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்டவற்றை பணி புறக்கணிப்பு செய்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நாடு முழுதும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை நாளை விசாரிக்கிறது.
ஏற்கனவே, இந்த வழக்கை விசாரித்த கோல்கட்டா உயர் நீதிமன்றம், மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டதாக கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. தற்போது உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளதால், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நாடு முழுதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருவதை அடுத்து, அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று சுற்றறிக்கை அனுப்பியது.
அதில், ‘டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருவதால், சட்டம் – ஒழுங்கை கண்காணிக்க வேண்டியது அவசியம். இதன்படி, இரு மணி நேரத்துக்கு ஒரு முறை, மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து, உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆர்.ஜி.கார் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம், தொடர்ந்து மூன்றாவது நாளாக, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்றும் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவரது மொபைல் போன் அழைப்புகள், ‘வாட்ஸாப்’ தகவல் பரிமாற்றங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் டாக்டரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாக, பா.ஜ., முன்னாள் எம்.பி., லாக்கெட் சாட்டர்ஜிக்கு, கோல்கட்டா போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதே போல், பிரபல டாக்டர்கள் குணால் சர்க்கார், சுபர்ணா கோஸ்வாமி உட்பட 59 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல், விசாரணை விபரங்களை வெளியிட்டதாக, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சுகேந்து சேகர் ராய்க்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சி.பி.ஐ., நியாயமாக செயல்பட வேண்டும். பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட வழக்கில், கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல், மருத்துவ கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஆகியோரை காவலில் எடுத்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.