(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
உள்நாட்டு திரைப்படத் துறைக்கும் உள்ளூர் கலைஞர்களுக்கும் பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என சுல்தான ரொஹாயா அறக்கட்டளைத் தலைவர் டத்தோ ஆர்.சுகுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
ஜோகூர் பாரு, தாசேக் சென்ட்ரலில் உள்ள திரையரங்கில் நடைபெற்ற இரும்புத் தோட்டம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் கலந்து கொண்ட அவர், அப்படத்தின் தயாரிப்புக் குழுவினருடன் இணைந்து படம் பார்வையிட்டார்.

சிறந்த கதையமைப்பு, உயர்தர தயாரிப்பு மற்றும் கலைஞர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றின் மூலம் ‘இரும்புத் தோட்டம்’ ஒரு பாராட்டத்தக்க படைப்பாக உருவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகக் கண்டு ரசிக்கக்கூடிய வகையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது எனவும் அவர் கூறினார்.
இத்திரைப்படத்தை சிறப்பாக உருவாக்கிய ஜெகன் ஜோன் பீட்டர் உள்ளிட்ட முழு தயாரிப்புக் குழுவினருக்கும் டத்தோ ஆர்.சுகுமாறன் தனது பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்.
உள்ளூர் கலைஞர்களின் திறமையை ஊக்குவிப்பதோடு, மலேசிய திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும் பொதுமக்கள் தொடர்ந்து துணை நிற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரையரங்கிற்கு சென்று ‘இரும்புத் தோட்டம்’ திரைப்படத்தைப் பார்த்து ஆதரவு வழங்குமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.






















