மணிலா: சீனாவைச் சேர்ந்த சட்டவிரோத கும்பலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பிலிப்பைன்ஸ் பம்பான் நகர முன்னாள் மேயர் எலிஸ் குவோவிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் பிலிப்பைன்ஸிலிருந்து தப்பியோடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை மிக அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தும் அவர் நாட்டைவிட்டு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிலிப்பைன்ஸ் குடிநுழைவு அதிகாரிகளின் உதவியின்றி இது சாத்தியம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் ஊழல் தலைவிரித்தாடுவதை இது உறுதிப்படுத்துகிறது என்றும் குவோ தப்பிச் செல்ல உதவியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இந்தோனீசிய அதிகாரிகள், அவரை பிலிப்பீன்சுக்கு நாடு கடத்த ஏற்பாடு செய்யக்கூடும் அல்லது அனைத்துலகக் காவல்துறையின் (இன்டர்போல்) உதவி நாடக்கூடும் என்று பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குவோ, பிலிப்பைன்ஸில் எவ்வாறு தப்பித்தார் என்று தெளிவாகத் தெரியவில்லை. அவர் பிலிப்பைன்ஸில் தான் இருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். குவோவின் கடப்பிதழை ரத்து செய்ய அதிபர் மார்கோஸ் உத்தரவிட்டுள்ளார்.