போர்ச்சுக்கல் :
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ யூடியூப் சேனலை ஆரம்பித்த 90 நிமிடங்களில் 10 லட்சம் பாலோயர்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டொ, 39, போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது, சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்து ஜாம்பவானாக திகழ்ந்து வரும் இவர், 5 முறை பாலன் டி.ஆர். விருதை வென்றுள்ளார்.
சமூகவலைதளங்களில் அதிகம் ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் போடும் ஒரு பதிவுக்கு ரூ.20 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறார்.
எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூகவலைதள பக்கத்திலும் கணக்கு வைத்துள்ள ரொனால்டோ, தற்போது UR. Cristiano எனும் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட உடனே, சப்ஸ்கிரைபர்கள் அதிகரித்து வருகின்றனர்.
குறிப்பாக, வெறும் 90 நிமிடங்களில் 10 லட்சம் சப்ஸ்கிரைபர்களை எட்டி விட்டார். தற்போது வரையில் 17 வீடியோக்களை வெளியிட்டுள்ள அவரது சேனல் 1.13 கோடி சப்ஸ்கிரைபர்களை தாண்டியுள்ளது. இந்த யூடியூப் சேனலில் குடும்பம், உடல் ஆரோக்கியம், விளையாட்டு உள்ளிட்டவை பற்றி பேசி வீடியோ வெளியிடுவார் என்று தெரிகிறது