ஒரு வீரர், எதிர்பாராத விதமாக அவுட் ஆனாலோ, அல்லது முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தாலோ, விரக்தியை வெளிப்படுத்துவார். பெவிலியன் திரும்பியதும், பேட்டை தூக்கி எறிவது, ஹெல்மெட்டை கழற்றி எறிவது, ஆக்ரோஷமாக கத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால், கார்லஸ் பிராத்வெய்ட், அதைவிட ஒருபடி மேலே போய், சம்பவம் செய்துள்ளார்.
தற்போது, மேக்ஸ்60 டி10 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கிராண்ட் கைமேன், நியூ யார்க் ஸ்ட்ரைகர்ஸ் ஆகிய அணிகள் மோதின. 2016 உலகக் கோப்பை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெற்றிருந்த பிராத்வெய்ட், நியூ யார்க் அணிக்காக விளையாடினார். இப்போட்டியில், 6ஆவது ஓவரில் களமிறங்கிய அவர், 9.3ஆவது ஓவரில், ஜோஸ்வா லிட்டில் வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்டபோது, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.
இதனைத் தொடர்ந்து, பெவிலியன் திரும்பிய பிராத்வெய்ட், அதிருப்தியில் ஹெல்மெட்டை கழற்றி, அதனை ஸ்டேடியத்திற்கு வெளியே அடித்தார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இறுதியில், இப்போட்டியில் நியூ யார்க் அணி 104/8 ரன்களை எடுத்தது. பிராத்வெய்ட் 5 (7) ரன்களை எடுத்திருந்தார். இலக்கை துரத்திக் களமிறங்கிய கிராண்ட் கைமேன் அணி, 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.