கையில் குத்திய பச்சை காய்வதற்குள் கண்ணை விட்டு மறைந்துவிட்டார் அம்மா!

கோலாலம்பூர்:

தன் அம்மாவின் மீது கொண்ட அலாதி அன்பால் விஜயலட்சுமி என்ற அவரது பெயரை, தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற சமயத்தில் தன் இடது கையில் பச்சை குத்திக் கொண்டார் மகன் எம். சூர்யா. அதை ஆசை ஆசையாக அம்மாவுக்கு காட்டலாம் என்று திரும்பி வந்த தினத்தில் அம்மா மண்ணில் புதைந்தே போனார் என்று துடித்து அழுகிறார் 25 வயது அன்பு மகன்.

அம்மாதான் எனக்கு உலகம். அம்மாவுக்காக நான் எதையும் செய்வேன். அதனால்தான் விடுமுறைக்காக சென்றிருந்த நேரத்தில் தாய்லாந்தில் பச்சைக் குத்தும் எண்ணம் வந்தபோது அம்மாவின் பெயர்தான் என் மனதில் பளிச்சென்று தோன்றியது.

அதைப்பற்றி அம்மாவுக்கு சம்பவ தினத்தன்று விடியற்காலையில் தான் சொன்னேன். அதை நேரில் வந்து அம்மாவிடம் காட்டுவதாகவும் கூறினேன். ஆனால் அதைக் காண அம்மா இப்போது இல்லை என்று கதறுகிறார் சூர்யா .

மறுநாள் இந்தியா செல்ல வேண்டியதால் தாய்லாந்தில் இருந்து அன்று காலைதான் மலேசியாவுக்குப் புறப்பட்டிருக்கிறார்
சூர்யா.

ஆனால் தாய் புதையுண்ட செய்தி அறிந்தவுடன் இ – ஹெய்லிங்கில் 600 ரிங்கிட் செலுத்தி தலைநகரை வந்தடைந்தார்.

ஆறு தினங்கள் கடந்தும் அம்மாவைக் காண முடியவில்லை என்ற துயரம் தாளாமல் அவர் அழுது துடிக்கிறார்.

அம்மாவின் உடல் கிடைத்தால் போதும். நிம்மதியின்றி அவர் அலைக்கழிய வேண்டாம்.

இந்தியா, ஆந்திராவில் உள்ள குப்பம் கிராமத்திற்கு என் தாயைக் கொண்டு போய்விடுவோம் என்று ஓயாமல் அரற்றிக் கொண்டிருக்கிறார் சூர்யா.

ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கெல்லாம் சூர்யாவும் அவரின் தந்தை மாத்தையாவும் மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு வந்து ஏக்கத்தோடு நிற்கும் காட்சி பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here