ஹைதராபாத்
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதியில் உள்ள பெண்கள் குளியலறையில், ரகசிய கேமரா வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவானதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகத்தினர் தயங்குவதாக கூறி விடிய விடிய மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பதற்றமான நிலை ஏற்பட்டது. ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், குட்லவல்லேருவில் மிகப்பெரிய பொறியியல் கல்லூரி ஒன்று செயல்படுகிறது.
இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதி கழிவறையில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராக்களை மாணவிகள் கண்டுபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் காரணமாக நேற்று நள்ளிரவு மாணவ மாணவிகள் போராட்டத்தில் இறங்கினார்கள். இதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் குட்லவல்லேரு போலீசார் கல்லூரி விடுதிக்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். இதையடுத்து விஜய்யை அழைத்து சென்று விசாரணை நடத்திய போலீசார், அவரிடம் இருந்த லேப்டாப் மற்றும் செல்போன் பறிமுதல் செய்தனர். கேமராக்களை அமைப்பதில் விஜய்க்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு மாணவியின் தொடர்பு குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இப்பிரச்னை குறித்து தெரிந்தும், கல்லூரி நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக குற்றம்சாட்டித்தான் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடியற்காலை 3.30 மணி வரை நீடித்த இந்த போராட்டம், மாணவர் விஜய்யை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற பிறகே முடிவுக்கு வந்தது. இதனிடையே கிருஷ்ணா மாவட்ட எஸ்பி கந்தாதர் ராவ் வெளியிட்ட அறிவிப்பில்,” சம்பந்தப்பட்ட கல்லூரியின் விடுதியில் நாங்கள் சோதனை செய்த மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கேமராக்கள் எதையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. சந்தேகமடைந்த மாணவர்களின் மடிக்கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் பிற சாதனங்களை மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் முன்னிலையில் சோதனை செய்தோம். அதில்வீடியோக்கள் எதுவுமே கிடைக்கவில்லை. இந்த பிரச்னை குறித்து மாணவிகள் கவலைப்பட தேவையில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.