பெங்களூரு: ரசிகர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் வைக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ரத்தக்கறை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மொத்தம் 3,991 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பெங்களூரு கீழமை நீதிமன்றத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 4) காவல்துறை தாக்கல் செய்தது. ரேணுகாசுவாமியின் கைப்பேசியில் பதிவான காணொளியும் சாட்சியங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தக் காணொளியில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் தன்னை அடிக்க வேண்டாம் என்று ரேணுகாசுவாமி கெஞ்சுவதாக உள்ளது.
ஆட்டோ ஓட்டுநரான 33 வயது ரேணுகாசுவாமி கடந்த ஜூன் 9ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு மேம்பாலத்திற்குக் கீழே பிணமாகக் கிடந்தார். நடிகர் தர்ஷனின் உத்தரவால் ஒரு கும்பல் அவரைக் கடத்திச் சென்று கொன்றிருக்கலாம் என்று காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகத்தில் நடிகரின் தோழி பவித்ரா கவுடாவைப் பாதிக்கும் காணொளியை ரேணுகாசுவாமி பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது விசாரணையில் தெரிய வருகிறது.





















