பெருகும் தற்கொலைகள்.. இளைஞர்கள் வாழ தகுதியற்ற நாடாகிறதா இந்தியா? பகீர் கிளப்பும் புள்ளிவிவரங்கள்

இளைய தலைமுறையிடம் தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய சூழல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது உருவாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இளம் வயதினர் தற்கொலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்ற கவலையளிக்கும் புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன. உலகளவில் மக்கள் தொகையில் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ள நிலையில் இந்த புள்ளிவிவரங்கள் கவனிக்கதக்கதாக உள்ளது.

இன்று [செப்டம்பர் 10] உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் இந்த வருடத்திற்கான குறிக்கோளான தற்கொலை குறித்த கருத்தியலை மாற்றுவது [“Changing the narrative on suicide”] குறித்த விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் 15 முதல் 19 வயதில் உள்ள இளைஞர்கள் உயிரிழப்புக்கு நான்காவது முக்கிய காரணமாகத் தற்கொலை உள்ளது.

தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 40 சதவீதம் 30 வயதுக்குக் கீழ் உள்ளவர்களே ஆவர். உலக சராசரியை விட இந்திய இளைஞர்களின் தற்கொலை விகிதம் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 160 இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். என்று எய்ம்ஸ் மனோதத்துவ பேராசிரியர் நந்த குமார் தெரிவிக்கிறார். NCRB அறிக்கைப்படி இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டில் 1.71 லட்சம் பேர் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர்.

அழுத்தமான குடும்பச் சூழல், நிலையில்லாத மன ஆரோக்கியம், தீய பழக்கம், காதல் முறிவு, நண்பர்கள் இன்மை, தனிமை உள்ளிட்டவை இந்த தற்கொலைகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. 15 முதல் 39 வயதிலான நபர்களின் உயிரிழப்புக்குத் தற்கொலை முக்கிய காரணமாக மாறியுள்ள நிலையில் இது உலகளவில் நாம் எதிர்கொண்டுள்ள பொது சுகாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக மனதளவில் பலவீனமாக ஒரு தலைமுறையாக தற்போதைய தலைமுறை மாறி வரும் நிலையில் உரிய கவனிப்பும், மன ரீதியான சிக்கல்களுக்குத் தீர்வும் முக்கிய தேவையாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here