கோலாலம்பூர்:
ஹலால் சான்றிதழ் தொடர்பில் கருத்துரைத்த செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் மீதான விசாரணை கிட்டத்தட்ட நிறைவு பெற்றிருக்கின்ற நிலையில் விசாரணை அறிக்கை அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் இன்னும் ஓரிரு தினங்களில் சமர்ப்பிக்கப்படும் என்று ஐஜிபி டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் இன்று கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் ஜசெக உதவி தலைவருமான திரேசா கோக்கிற்கு எதிராக இன்று நண்பகல் வரை நாடு முழுவதும் 50 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
திரெசா கோக்கின் கருத்து சமயத்தை தொட்டிருப்பதால் குற்றவியல் சட்டம் பிரிவு 298 கீழ் விசாரணை நடத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரையிலான சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
உணவகங்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் ஹலால் சான்றிதழ் வைத்திருப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று ஜாக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா பரிந்துரைத்திருக்கிறது.
இது குறித்து கருத்துரைத்த திரேசா கோக் இது முஸ்லிம் அல்லாதார் வணிகர்களுக்கு பெரும் சுமையாக மாறிவிடும் என்றார்.








