பழுதுபார்ப்பு வேலையில் இருந்த மெக்கானிக் உடல் நசுங்கி மரணம்

சிம்பாங் பூலாய்:

நெடுஞ்சாலையில் பழுதடைந்து நின்றிருந்த கனரக வாகனம் ஒன்றை பழுதுப் பார்க்கச் சென்ற மெக்கானிக் ஒருவர், இரு வாகனங்களுக்கு இடையில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 286.6ஆவது கிலோ மீட்டரில் சிம்பாங் பூலாய்க்கு அருகில் இன்று பின்னிரவு 1.35 மணியளவில் நேர்ந்த அந்த விபத்தில் முகமட் மரிநூர் சிக் என்ற 60 வயது ஆடவர் உயிரிழந்தார்.

சாலையோரத்தில் நின்றிருந்த கனரக வாகனத்தின் முன்புறமாகத் தன்னுடைய வேனை நிறுத்திவிட்டு அவர் அந்த கனரக லோரியைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தார்.

அந்தச் சமயத்தில் அங்கு தன் காரில் வந்த அவருடன் பணிபுரியும் ஒரு சகா, வேனுக்கு முன்பாக தன் வாகனத்தை நிறுத்த முயர்ச்சித்தார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த அவரது வாகனம் வேகமாகப் பின்னால் நகர்ந்து அங்கிருந்த வேனை மோதி பின்புறமாக நகர்த்தியது.

அச்சமயத்தில் வேனுக்கும் கனரக லோரிக்கும் இடையில் நின்று பழுது பார்த்துக் கொண்டிருந்த முகமட் மரிநூர் அந்த இரண்டு வாகனங்களுக்கும் இடையில் சிக்கி நசுங்கினார்.

பலத்த காயங்களின் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அபாங் ஸைனால் அபிடின் அபாங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here