புதுடில்லி:
மின்சார கார் தயாரிப்பு தொடர்பான நவீன தொழில்நுட்பங்களை, இந்தியா உள்ளிட்ட வேறு எந்த நாட்டுக்கும் தெரிவிக்கக் கூடாது என, சீன வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் வருமாறு:
மின்சார வாகன தயாரிப்பில், அதன் முக்கிய பாகங்களை சீனாவிலேயே தயாரித்து, இறுதியாக, ‘அசெம்பிள்’ எனப்படும் ஒன்று சேர்க்கும் பணியை மட்டும் வெளிநாடுகளில் மேற்கொள்ளுமாறு, வாகன நிறுவனங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
சீன வர்த்தக அமைச்சகம் கடந்த ஜூலையில் நடத்திய கூட்டத்தில், 12க்கும் மேற்பட்ட அந்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்நிலையில், இந்தியாவில் எந்த முதலீடும் மேற்கொள்ளக்கூடாது என்று கூட்டத்தில் இந்நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டதாக தெரிகிறது.
சீன நிறுவனங்களை ஆலை அமைக்க அழைக்கும் நாடுகளில் பலவும், சீன வாகனங்களுக்கு எதிராக வர்த்தகத் தடை விதித்துள்ள மற்றும் விதிக்க முற்படும் நாடுகள் தான் என்றும், அந்நாடுகளில் முதலீடு மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சீன மின்சார வாகன தொழில்துறை குறித்த தகவல்களை பாதுகாக்கவும்; ஒழுங்குமுறை கண்காணிப்பு சிக்கல்களில் இருந்து நிறுவனங்களை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இவ்வாறு சீன வர்த்தகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.









