கோலாலம்பூர்:
மலாய் பாடகர் நமாவி அண்மையில் பாடிய ‘புக்கிட் மாக் ‘ என்ற பாடலில் ஆபாசம் தொணிக்கிறது என்ற சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
புகழ் பெற்ற மலாய் நகைச்சுவை கலைஞர் ஹரித் இஸ்கண்டாருடன் இணைந்து, புக்கிட் பிந்தாங்கில் உள்ள பேரங்காடி ஒன்றின் முன்புறத்தில் அந்த பாடலை பாடும் காட்சி வலைத்தளங்களில் பரவிய சில மணி நேரங்களில் அந்த பாடலுக்கு எதிரான கண்டனங்கள் வலுக்க தொடங்கின.
புக்கிட் மாக் என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் அவர்கள் பாடுகையில் கொச்சை வார்த்தையை உச்சரிப்பது போலவே இருக்கிறது என்றும் அதை கேட்கவே நாராசமாக இருக்கிறது என்றும் ஃபேஸ்புக் பயனீட்டாளர்கள் எரிச்சல் அடைந்திருக்கின்றனர்.
உண்மையிலேயே கிளந்தானில் புக்கிட் மாக் என்ற ஓர் இடம் இருப்பது வாஸ்தவமாயினும் வேண்டுமென்றே அபத்தமான அர்த்தம் தொனிக்கும் வண்ணம் இந்த பாடலில் அனாவசியமாக அந்த வார்த்தை உச்சரிக்கப்படுகிறது என்று ஒரு நபர் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னோர் இணைய பயனீட்டாளரோ பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கும் நாசகரமான காரியம் இது என்கிறார்.
மலேசியாவின் பண்பாடு கேலி பொருளாக்காப்படும் அநாகரிக பாடல் வரி அது என்றும் நெட்டிசன்கள் ஏகத்துக்கும் புலம்பி தள்ளியுள்ளனர்.