கோலாலம்பூர்:
நாட்டில் புதிதாக ஒரு குரங்கம்மை (mpox) தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்த நோயாளி ஒரு ஆண் என்றும், இவர் கடத்த செப்டம்பர் 11 ஆம் தேதி காய்ச்சல், தொண்டை புண் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளால் அவதிப்பட்ட்தாகவும், பின் செப்டம்பர் 12 அன்று அவரது உடலில் சொறி தோன்றியதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சுகாதார அமைச்சு கூறியது.
குறித்த நோயாளிக்கு இந்த அறிகுறிகள் தோன்றுவதற்கு 21 நாட்களுக்குள் அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செல்லவில்லை என்றும், தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நோயாளியின் தொடர்புகள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், தற்போதைய கடுமையான நிலையான இயக்க நடைமுறைகளின் (SOPs) படி அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படும் என்றும் அது மேலும் கூறியது.
இந்நிலையில், ஜூலை 26, 2023 அன்று முதல் வழக்கு கண்டறியப்பட்டதில் இருந்து இன்றுவரை மலேசியாவில் ஒன்பது குரங்கம்மை (mpox) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதே ஆண்டு நவம்பரில் கடைசியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 15 அன்று அமைச்சகம் கூறியது குறிப்பிடத்தக்கது.




















