சென்னை :
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜுன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஓராண்டிற்கும் மேலாக 471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின், தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் வரவேற்றனர். இந்நிலையில், ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி தி.மு.க தலைவர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று பேசினார்.
தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் செந்தில் பாலாஜி சந்தித்தார். செந்தில் பாலாஜியை கட்டித் தழுவி உதயநிதி வரவேற்றார்.
இதுகுறித்து உதயநிதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்” என்றார்.