சிரம்பான்:
நீலாய் பெர்சியாரான் கோல்ஃப் சாலை சிக்னல் சந்திப்புக்கு அருகில் ஜாலான் பெர்சியாரான் நெகிரியில் ஒரு டிப்பர் லோரி ஐந்து கார்களை மோதியதில் 31 வயது பெண்மணி உடலிலும் தலையிலும் ஏற்பட்ட கடுமையான காயங்களால் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று பிற்பகல் 3.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பெரோடுவா அத்திவா காரை ஓட்டி வந்த அப்பெண்மணி அவரின் இருக்கையில் சிக்கிக்கொண்டார் என்று நீலாய் மாவட்ட துணை போலீஸ் தலைவர் டிஎஸ்பி மாட் கனி லாத்தே இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
30 வயதிலான ஓர் ஆடவர் அந்த டிப்பர் லோரியில் மணல் ஏற்றி வந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த டிப்பர் லோரி வழுக்கிச் சென்று சிக்னல் விளக்கு சந்திப்பில் நின்றிருந்த ஐந்து கார்கள் மீது மோதியது என்று முதல் கட்ட புலன் விசாரணையில் தெரிய வந்தது என்று அவர் சொன்னார்.
பெரோடுவா அல்ஸா காரில் இருந்த நால்வர் லேசாக காயமுற்றனர். லோரி ஓட்டுநர், ஹொன்டா சிவிக், நிசான் செரேனா, சூஸுக்கி சுவிஃப்ட் ஆகிய வாகனங்களின் ஓட்டுநர்கள் காயமடையவில்லை என்று மாட் கனி அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிரம்பான் துவாங்கு ஜாபார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இறந்த பெண்மணியின் உடலும் அம்மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.