இதனை முன்னிட்டு நேற்று கருடன் சின்னம் பொரித்த கொடியை ஏற்றுவதற்கான புனித தர்ப்பை மற்றும் புனித கொடியேற்றும் கயிறு போன்றவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோவிலில் ஒப்படைத்தனர்.
இந்த கயிறு கொடி போன்றவை ரங்கநாயக மண்டபத்தில் பெரிய சேஷ வாகனத்தில் வைக்கப்பட்டது.
பிரம்மோற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை அங்குரார்ப்பணம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து விஸ்வக்சேனர் 4 மாட வீதிகளில் உலா வந்து பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை பார்வையிடும் வைபவம் நடைபெறுகிறது. நாளை மாலை 3 மணி முதல் 5 மணிக்குள் கொடியேற்று விழா நடக்கிறது.
இதனை தொடர்ந்து இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
அதனை தொடர்ந்து 9 நாட்கள் பல்வேறு வாகன உற்சவ சேவை நடைபெறுகிறது. வருகிற 8-ந்தேதி பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை நடக்கிறது.
பிரம்மோற்சவ விழாவில் இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. திருப்பதி மலையில் முக்கிய இடங்கள் மற்றும் மாடவீதிகளிலும் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா அரசு சார்பில் நாளை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை ஏழுமலையானுக்கு வழங்க உள்ளார்.
இதற்காக அவர் நாளை திருப்பதி வருகிறார். கோவிலில் பட்டு வஸ்திரங்களை அரசு சார்பில் அவர் சமர்ப்பிக்கிறார்.
இரவு திருமலையில் தங்கும் அவர் நாளை மறுநாள் காலை கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவம் தொடங்குவதால் திருப்பதியில் எங்கு பார்த்தாலும் மின் அலங்காரத்தில் ஜொலிக்கிறது. பஸ் நிலையம், ரெயில் நிலையம் தேவஸ்தான நிர்வாக அலுவலகம் உட்பட முக்கிய கூட்டுச் சாலைகளிலும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
அலிப்பிரி நுழைவு வாயில் உட்பட மலைப்பாதை நடைபாதை மாடவீதி கோவில் கோபுரம் மற்றும் முக்கிய இடங்களில் அலங்காரத் தோரணங்கள் கட் அவுட்டுகள் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது. இதனால் திருப்பதி மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.
பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் 12-ந் தேதி வரை 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்