புதுடில்லி: விலை உயர்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வாயிலாக, 50,000 கோடி ரூபாய் வரை சீனாவுக்கு அனுப்பியதாக எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
விலை உயர்ந்த அறைகலன்கள், மின்னணு சாதனங்கள் இறக்குமதியின்போது மதிப்பை குறைவாக காட்டி, வரி ஏய்ப்பு நடைபெறுவதாக சில நிறுவனங்கள் மீது நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இறக்குமதி பொருட்களின் மதிப்பில், மீதி தொகையை சீன விற்பனையாளர்கள் வாயிலாக, அந்நாட்டுக்கு இறக்குமதி நிறுவனங்கள் அனுப்புவது தெரியவந்தது.
அதன் அடிப்படையில், அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் கடந்த ஆறு மாதங்களில், 50,000 கோடி ரூபாய் வரை சீனாவுக்கு இவ்வாறு கைமாறியதாக கூறப்படுகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை இதுதொடர்பாக துவக்கியுள்ள விசாரணையை மத்திய நிதி, உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் கூர்ந்து கவனித்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுபோன்ற ஹவாலா மோசடி, கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் பணம் மற்றும் மின்னணு பரிமாற்றங்கள் வாயிலாக நடந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதைத் தடுக்க, சீன இறக்குமதி பொருட்கள் மற்றும் இறக்குமதி நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன், நாட்டின் பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்துவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.