சென்னை:
‘மீனவர்கள் விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதோடு கடமையை முடித்துக்கொண்டது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
இது குறித்து, சீமான் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம், இடிந்தகரை பகுதியைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடித்தொழில் செய்து வந்த நிலையில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக அவர்களின் படகு பஹ்ரைன் நாட்டின் எல்லைக்குள் தவறுதலாகச் சென்றதால் கடந்த செப்டம்பர்11ல் அந்நாட்டின் கடலோரக் காவற்படையால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களையும் விடுவிக்க தூதரக அதிகாரிகள் மூலம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடம் மீனவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்த நிலையிலும், மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் பஹ்ரைன் நீதிமன்றம் 28 மீனவர்களுக்கும் 6 மாதகால சிறைதண்டனை விதித்துள்ளது. இதனால் மீனவர்களின் வருமானத்தை நம்பி, அதையே வாழ்வாதாரமாக கொண்ட அவர்களது குடும்பங்கள் செய்வதறியாது தவித்துப் போயுள்ளனர்.
பார்லிமென்டில் கூட்டணி பலத்தோடு 40 உறுப்பினர்களை கொண்டுள்ள திமுக, மத்திய அரசினை வலியுறுத்தி, தூதரகம் மூலம் மீனவர்களுக்கு உரிய சட்ட உதவிகள் கிடைப்பதற்கும், மீனவர்களை விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.








