கோலாலம்பூர்:
நாட்டில் வெள்ளநிலவரம் குறிப்பாக பேராக் மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று பிற்பகலுக்குப் பிறகு அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஜோகூரில் வெள்ளநிலவரம் சற்று சீரடைந்து வருகிறது.
பேராக்கில், நேற்று மாலை 51 குடும்பங்களைச் சேர்ந்த 166 பேருடன் ஒப்பிடும்போது, இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 85 குடும்பங்களைச் சேர்ந்த 262 பேராக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள ஆறு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கெடாவில், இன்று காலை 679 குடும்பங்களைச் சேர்ந்த 2,058 பேர் அங்குள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று, கெடா மாநில குடிமைத் தற்காப்புப் படை துணை இயக்குநர் மேஜர் முஹமட் சுஹைமி முகமது ஜைன் கூறினார்.
இந்நிலையில், ஜோகூரில் நேற்று மதியம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 61 குடும்பங்களைச் சேர்ந்த 196 பேராக இருந்த நிலையில், இன்று காலை 46 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேராக குறைந்துள்ளது.
இருப்பினும் நேற்றிரவு தாமான் லயாங்-லயாங் மற்றும் கம்போங் பாயா லாயாங்-லயாங் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் 13 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று, மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.








