விரைவில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் 1ம் தேதியை (வெள்ளிக்கிழமை ) கூடுதல் விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று பரித்துரை செய்யப்பட்டிருக்கிறது.
ம.இ.கா.வின் உதவித் தலைவர் டி.முருகையா இந்தப் பரிந்துரையை முன் வைத்தார். நீண்ட தீபாவளி கொண்டாட்டத்தை மக்கள் அனுபவிப்பதற்கான வாய்ப்பாக இது அமையக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
தீபாவளி பெருநாளைக் கொண்டாடும் இந்து மக்களுக்கு மட்டும் இது நன்மையைக் கொண்டு வரப் போவதில்லை, மாறாக நாட்டில் பல்வகை கலாசாரங்களுக்கு மதிப்பளிக்கும் உணர்வுகளைக் கொண்ட பிற இனத்தாருக்கும் கூட இது பலனையளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்து சமயத்தவரால் கொண்டாடப்படும் மிக முக்கியப் பெருவிழா தீபாவளி பண்டிகையாகும். குடும்பத்தாருடன் யாவரும் குதூகலிக்கவும் சமூக ஒற்றுமையை வலுவாக்கவும் கூடிய பெருநாளாகும் இது.
ஒளிவிழாவான தீபாவளி அக்டோபர் 31ம் தேதி கொாண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மறுநாள் நவம்பர் 1ம் தேதியை கூடுதல் விடுமுறையாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தேசிய ஒற்றுமையை முன்னிறுத்தியும் பலதரப்பட்ட இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்மும் மத்திய அரசாங்கமும் இந்தப் பரிந்துரையைப் பரிசீலித்து விடுமுறை வழங்க வேண்டுமாய் முருகையா கேட்டுக் கொண்டார்.










