புதுடெல்லி:
இந்தியத் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. தற்போது இங்கு காற்றின் தரம் 226ஆகப் பதிவாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துவரும் இந்தக் காற்று மாசு காரணமாக தொண்டை அடைப்பு, மூச்சுத்திணறல், கண்களில் எரிச்சல், சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளிக்குப் பின்னர் இந்தக் காற்று மாசுபாட்டின் அளவு இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இதனால் யமுனை ஆற்றின் நீர் பயன்படுத்தமுடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.