ஜார்ஜியா:
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் கரையோரத்தில் படகுத்துறை மேடையின் ஒரு பகுதி நேற்று (அக். 19) பிற்பகல் இடிந்து விழுந்ததில் குறைந்தது எழுவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் அட்லாண்டிக் கடலில் குறைந்தது 20 பேர் விழுந்ததைத் தொடர்ந்து, காணாமல்போனவர்களைத் தேடும் பணியில் அமெரிக்கக் கடலோரக் காவல்படைக் கப்பல்கள் நேற்றிரவு ஈடுபட்டன.
குல்லா-கீச்சி சமூகத்தின் கொண்டாட்டத்திற்காக சபேலோ தீவில் மக்கள் கூடியபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கிய பொருள்களை ஒலி அலைகள் கொண்டு அறியும் வசதி கொண்ட கடலோரக் காவல்படைக் கப்பல்களும் ஹெலிகாப்டர்களும் உடனடியாக தேடுதல், மீட்புப் பணியில் ஈடுபடத் தொடங்கியதாக அதிகாரிகள் கூறினர்.
விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.








