பிரதமர் அன்வார் இப்ராஹிம் 2025 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது இந்திய சமூகத்தின் அவல நிலையை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுல்தான் அப்துல் சமாட் மற்றும் கார்கோசா ஶ்ரீ நெகாரா கட்டிடங்களை புதுப்பிக்க அன்வார் 600 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கினார். ஆனால் இந்திய சமூகத்திற்கு 130 மில்லியன் ரிங்கிட்டை மட்டுமே ஒதுக்கியிருப்பது குறித்து பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
மலேசிய இந்திய மக்கள் கட்சியின் (எம்ஐபிபி) தகவல் தலைவர் சுதன் மூக்கையா டிக்டோக்கில் ஒரு இடுகையில், இந்த நாட்டில் மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் ஒதுக்கப்பட்ட இந்திய சமூகத்திற்கான ஒதுக்கீடு ஆண்டுதோறும் குறைந்து வருவதால் நான் கவலைப்படுகிறேன். பிற சமூகங்களுக்கு பில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பழைய கட்டிடங்கள் புதுப்பிக்க 600 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை பெற்றிருக்கிறது. மித்ராவிற்கு (மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு) 100 மில்லியன் ரிங்கிட்டும், தெக்குனுக்கு 30 மில்லியனும் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் இந்திய சமூகத்தின் மீது ஒரு சிறிய துண்டினை (தொகையை) எறிந்துவிட்டு, நன்றியுடன் இருக்கவும், வாயை மூடிக்கொள்ளவும் சொல்கிறீர்கள். மிஸ்டர் நம்பியார் (அன்வாரைக் குறிப்பிட்டு) நான் உங்களிடன் ஒன்றினை கேட்க விரும்புகிறேன். இப்போது இந்திய சமூகம் தேவையற்ற மாற்றாந்தாய் போல் நடத்தப்படவது ஏன்? இது அவமதிப்பு மட்டுமல்ல, மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் எதிர்காலத்திற்கு மரண தண்டனை போன்றது என்றும் அவர் கூறினார். மறைந்த எம்.என்.நம்பியார் 1960 மற்றும் 1970களில் எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமான தமிழ் நடிகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









