கோலாலம்பூர்: பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை (அக். 18) தாக்கல் செய்த பட்ஜெட் 2025, அனைத்து மலேசியர்களுக்கான பட்ஜெட்டாகும். அதில் எந்தச் சமூகமும் கைவிடப்படவில்லை என்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கருத்துரைத்தார்.
பட்ஜெட் 2025 இன் கீழ் 130 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்ட பிறகு இந்திய சமூகம் ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்ததாகக் கூறி சில கட்சிகளை அவர் சாடினார். இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை, பிரதமர் எத்தனையோ தடவை சொல்லியிருக்காரு… (சமூகங்களுக்கு ஏற்ப ஒதுக்கீடு) பிரிக்க வேண்டாம்… (சில கட்சிகள்) இந்திய சமூகத்துக்கு 130 மில்லியன் ரிங்கிட் மட்டுமே கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள், இதன் பொருள் ஒதுக்கீடு? ஆரோக்கியம் என்பது இந்திய சமூகத்திற்கு அல்லவா?
அதுதானே அர்த்தம்? கல்வி அமைச்சிற்கு 64 பில்லியன்… கல்வி என்பது தேசியப் பள்ளிகள் அல்லது சீனப் பள்ளிகளுக்கானதா? இல்லை, (ஒதுக்கீடு) அனைவருக்குமானது என்று BRIEF-i ஃபைனான்சிங் திட்டத்திற்காக திங்கள்கிழமை (அக் 21) ஒரு மாதிரி காசோலையை ஒப்படைத்த பின்னர் ஒரு ஊடக மாநாட்டில் கூறினார்.
எனவே, சில பொறுப்பற்ற தரப்பினரால் செய்யப்படும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் இந்திய சமூகம் பாதிக்கப்பட வேண்டாம் என்று அவர் நினைவூட்டினார். மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்பு அதை (பட்ஜெட் 2025) சரியாக ஆராயுமாறு வலியுறுத்தினார். 2025 பட்ஜெட்டின் கீழ் இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட RM130 மில்லியன் அவர்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தவும் உதவவும் முடியுமா என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியதாக ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன.















