பாறைகளுக்கிடையே ஏழு மணிநேரம் தலைகீழாகச் சிக்கிக்கொண்ட பெண்

சிட்னி: தமது கைப்பேசியை எடுக்கப் போய் இரண்டு பெரும் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார் ஆஸ்திரேலியப் பெண் ஒருவர்.

மீட்புப் பணியாளர்கள் பாதுகாப்பாக அவரை மீட்கும்வரை தலைகீழாக ஏழு மணி நேரம் அந்தப் பெண் குறுகலான ஒரு சந்தில் தொங்கிக்கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

திருவாட்டி மடில்டா கேம்பல் என்ற அந்த மலையேறி, நியூ சவுத் வேல்சின் ஹண்டர் வேலி பகுதியில் நடந்துசென்றபோது மூன்றடி ஆழமுடைய அந்தச் சந்துக்குள் விழுந்துவிட்டார்.

மீட்புப் பணியாளர்கள் வருவதற்கு முன்னரே அவர் ஒரு மணிநேரமாகத் தொடங்கிக்கொண்டிருந்தார். திருவாட்டி கேம்பலை விடுவிக்க மேலும் பல மணிநேரம் பிடித்தது.

“மீட்பு மருத்துவ உதவியாளராக எனது பத்தாண்டு அனுபவத்தில், இதுபோன்ற ஒரு மீட்புப் பணியில் நான் ஈடுபட்டதில்லை. சவால்மிக்கதாகவும் இருந்தது; இறுதியில் மனநிறைவாகவும் இருந்தது,” என்று நியூ சவுத் வேல்சின் அவசர மருத்துவ வண்டிச் சேவையுடன் மருத்துவ உதவியாளராக உள்ள திரு பீட்டர் வாட்ஸ் கூறினார்.

ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட படங்களில், சிக்கிக்கொண்ட பெண்ணின் பாதங்கள் மட்டுமே தெரிந்தன.

மீட்புப் பணியினர் 500 கிலோ பாறை ஒன்றை எப்படியோ தளர்த்தியும் வளைவான ஓர் இடுக்கில் பெண் சிக்கியிருந்ததால் அவரை விடுவிக்க மிகவும் சிரமப்பட்டனர்.

இறுதியில், சிறு காயங்களுடன் திருவாட்டி கேம்பல் மீட்கப்பட்டார். அவரது கைப்பேசியின் கதையோ முடிந்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here