போர்ட்டிக்சன் தேசிய வகை பள்ளிக்கு முன்னால் சாலையைக் கடக்கும்போது, போதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் கார் ஓட்டுநர் மோதியதில் 11 வயது மாணவர் காயமடைந்தார். வியாழக்கிழமை (அக்டோபர் 24) காலை 7.10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
போர்ட்டிக்சனில் இருந்து தெலுக் கெமாங்கிற்குச் செல்லும் 28 வயது ஓட்டுநர் மோதிய சம்பவத்தின் போது சமிஞ்சை விளக்கு சிவப்பு வர்ணத்தில் இருந்ததாக போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர் மஸ்லான் உடின் உறுதிப்படுத்தினார். இதன் விளைவாக, மாணவர் வலது கட்டைவிரல் உடைந்ததோடு மேலும் அவரது கைகள் மற்றும் கால்களில் இரத்தப்போக்கு ஏற்பட்டது.
சந்தேக நபரை கைது செய்த போலீசார், 100 மில்லி கிராம் இரத்தத்தில் 230 மில்லிகிராம் மதுபானம் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று மஸ்லான் மேற்கோள் காட்டினார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 44(1A)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், RM30,000க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்படும். போர்ட்டிக்சனில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு எதிரே உள்ள பாதசாரிகளின் நடைபாதையில் நீல நிற பெரோடுவா மைவி சிவப்பு விளக்கை தாண்டி செல்லும் சம்பவத்தின் வைரலான பதிவு காட்டுகிறது.
சம்பவத்தின் டேஷ்கேம் காட்சியில், பக்கத்திலிருந்த இளம் மாணவனை மைவி மோதுவதும், அதன் பிறகு திடீரென நிறுத்தப்பட்டு, அவரது வாகனத்தை விட்டு இறங்கியதும் காட்டப்பட்டது. அந்த மாணவர் வலியால் துடித்தபடி கையை இறுக்கி பிடிப்பதையும் காண முடிகிறது.










