கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் 10 வயது சிறுவன் ஒருவன் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேஹா பிஸ்வால் என்ற பெண் பெங்களூரு நகர சாலையில் நடந்தபடியே வீடியோ பதிவு செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவ்வழியே வந்த சிறுவன் ஒருவன் அப்பெண்ணை தகாத முறையில் தொட்டு விட்டு அங்கிருந்து செல்கிறார். இந்த சம்பவம் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.சமூக வலைத்தளங்களில் இன்புளுயன்சராக இருக்கும் நேஹா பிஷ்வால் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய நேஹா பிஸ்வால், “எனக்கு இந்த மாதிரி ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை. நான் சாலையில் நடந்து கொண்டே வீடியோ பதிவு செய்து கொண்டு இருக்கும்போது எனக்கு பின்னால் இருந்து சைக்கிளில் வந்த சிறுவன் ஒருவன் என்னை கடந்து சென்றவுடன் சைக்கிளை திருப்பி கொண்டு என்னை நோக்கி வந்தான். என அருகில் வந்த சிறுவன் என்னை கிண்டலடித்தான். என்னை போலவே பேசி மிமிக்ரி செய்தான். பின்னர் தகாத முறையில் என்னை சீண்டினான்.
உடனே நான் சத்தம் போட்டதும் அக்கம்பக்கத்தினர் அந்த சிறுவனை பிடித்தனர். அவர்களிடம் நான் நடந்ததை கூற, அவர்களோ இவன் சிறுவன் வேண்டுமென்றே இவ்வாறு செய்திருக்க மாட்டான் என்று அவன் மீது கருணை காட்டினார்கள். நான் எனக்கு நடந்த பாலியல் சீண்டல் தொடர்பான வீடியோவை அவர்களிடம் காட்டியபிறகு தான் அவர்கள் அதை நம்பினார்கள்.
ஆனாலும் கூட சிலர் சிறுவன் மீது இரக்கம் காட்டினார்கள். நான் அந்த சிறுவனை அடித்தேன். என்னுடைய நிலையை உணர்ந்து அங்கிருந்த சிலரும் அந்த சிறுவனை அடித்தார்கள். ஆனால் அந்த இடத்தில் நான் பாதுகாப்பாக உணரவில்லை.
அந்த சிறுவனின் மீது போலீசில் புகார் கொடுத்து அவனது எதிர்காலத்தை அழிக்க விரும்பவில்லை. ஆனால் அந்த சிறுவனை இது தொடர்பாக கண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இந்த வீடியோ தொடர்பாக தானாக முன்வந்து பெங்களூரு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.