கோம்பாக்:
நேற்று கோலாலம்பூர் – காரக் நெடுஞ்சாலையில், இராணுவத்திற்கு சொந்தமான கவசக் கார்களை ஏற்றிச் சென்ற டிரான்ஸ்போர்ட்டர் (KPKP) வாகனம் சறுக்கி, சாலையின் தடுப்புச்சுவரில் மோதி, எதிர் பாதையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவந்துள்ளதாக கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நூர் அரிபின் முகமட் நசீர் தெரிவித்துள்ளார்.
பெந்தோங்கில் இருந்து கோலாலம்பூர் செல்லும் நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் (KM) 35.3ல் இந்த விபத்து நடந்ததாக அவர் கூறினார்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், ‘லோடர்’ டிரக்கை ஓட்டிச் சென்ற 30 வயதுடைய ஆடவர், அவரது உதவியாளரான 29 வயது இளைஞரும், மலேசிய ஆயுதப்படைக்கு சொந்தமான இரண்டு கவச கார்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு வந்தபோது, குறித்த லோரி சறுக்கி வலதுபுறம் உள்ள சாலைத் தடுப்புச் சுவரில் மோதி எதிரே வந்த பாதையில் கவிழ்ந்தது என்றும், இந்த விபத்தில் ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 43 (1)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.