பக்கத்தான்-தேசிய முன்னணி கூட்டணி தொடரும்: அந்தோனி லோக்

ஷா ஆலம்:

2028ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 16வது பொதுத் தேர்தலிலும் பக்கத்தான் ஹரப்பான்-தேசிய முன்னணி கூட்டணி தொடர வாய்ப்பு உள்ளது என்று ஜனநாயக செயல் கட்சி (DAP) தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் அரசியல் எதிரிகளாக இருந்த பக்கத்தான் ஹரப்பானும் தேசிய முன்னணியும் தற்போது கூட்டாக ஆட்சி செய்து வருகின்றன. ஆனால் கூட்டணி தொடர்வதற்கு சில நிபந்தனைகளும் இருப்பதாக அவர் கூறினார்.

தேசியத் தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருக்கும் மலேசியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வாழ்க்கைச் செலவு, பணவீக்கத்தை கையாள்வதைப் பொறுத்து சாத்தியமான கூட்டணி அமையும் என்று லோக் சொன்னார்.

தற்போதைய ஒற்றுமை அரசாங்கம், பொருளாதார ரீதியாக மலேசியாவை மீட்டெடுப்பதும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அடுத்த மூன்று ஆண்டுகளில் நமது பொருளாதார மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் பணவீக்கத்தையும் வாழ்க்கைச் செலவினங்களையும் கட்டுப்படுத்தி மக்களுக்கு நல்வாழ்வை வழங்க முடிந்தால், அடுத்த தேர்தலுக்குள் நாடு சரியான திசையில் செல்வதாக பெரும்பான்மை மலேசியர்கள் உணர்வார்கள். ஒட்டுமொத்த மக்களும் தங்கள் வாழ்க்கை முன்பைவிட மேம்பட்டதாக இருக்கும் என்பதையும் நம்புவார்கள்.

“இவற்றை நம்மால் சாதிக்க முடிந்தால் தற்போதைய அரசாங்கம், தேர்தலில் வெற்றி பெற்று புத்ராஜெயாவில் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்,” என்று தாம் நம்புவதாக, சிலாங்கூரில் நடந்த DAP கட்சி மாநாட்டில் அவர் இவ்வாறு பேசினார்.

இந்த மாநாடு நேற்று (நவ.10) ஐடியல் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here