ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலையின் பயங்கர சீற்றம் காரணமாக பாலிக்குச் செல்ல வேண்டிய விமானங்களை ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.
ஜெட்ஸ்டார், குவாண்டாஸ் மற்றம் விர்ஜின் ஆஸ்திரேலியா ஆகிய விமான நிறுவனங்கள் அவை.
நவம்பர் 12, 13 தேதிகளுக்கான பாலி பயணங்களை அவை ரத்து செய்துள்ளன. திடீர் என்று ரத்து செய்யப்பட்டதால் விமானப் பயணிகள் சிரமங்களுக்கு ஆளானதாக ‘கார்டியன்’ செய்தித்தாள் குறிப்பிட்டது.
ஈஸ்ட் நூசா தெங்காராவில் உள்ள லக்கி-லக்கி எரிமலை பாலியில் இருந்து ஏறத்தாழ 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கடந்த சனிக்கிழமை எரிமலை மூன்று முறை குமுறியதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் இதற்கு முன்னர் கூறினர்.
இம்மாதத் தொடக்கத்தில் அந்த எரிமலை வெடித்ததன் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்தனர். 15,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.