2025 சிலாங்கூருக்கு வருகைபுரியும் ஆண்டு: GM Klang நிறுவனத்தின் சிறப்புப் பிரச்சாரம்

ராமேஸ்வரி

கிள்ளான்:

2025ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்திற்கு வருகை புரியும் ஆண்டாக இருக்கும் வேளையில் மொத்த விற்பனை மையமான GM Klang நிறுவனம் பல்வேறு சிறப்புப் பிரச்சாரங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வாண்டு இறுதி தொடங்கி அடுத்தாண்டு தொடக்கம் வரை இந்தப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளைக் கவரும் வகையில் இந்தப் பிரச்சாரங்கள்
மேற்கொள்ளப்படவுள்ளன.

இப்பிரச்சாரத்தை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் வீடமைப்பு ஊராட்சி, சுற்றுலாக் குழுவின் தலைவருமான இங் சுயி லிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

GM Klang நிறுவனத்தின் கீழ்த்தளத்தில் உள்ள மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நாம் பொருட்களை மொத்தமாக வாங்குவதற்கு எங்கே செல்வோம் என சமூக வலைத்தளங்களில் படங்களை அனுப்பும் பிரச்சாரமும் இதில் அடங்கும்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பல பகுதிகளுக்குச் சுற்றுலா செல்லும் அம்மாநில மக்கள் GM Klang நிறுவனத்திற்கு வருகை புரிவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் சிறப்புப் பிரச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சாரத்தில் கலந்து கொள்பவர்கள் GM Klang உட்பட இதர இடங்களுக்குச் சுற்றுலா சென்றதற்கான இரண்டு படங்களை இதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேவேளையில் கிள்ளான் நகரில் உள்ள GM Klang நிறுவனத்திற்கு வருகை தந்து 200 ரிங்கிட்டைச் செலவிடும் பொதுமக்கள் கவர்ச்சிகரமான பரிசுகளைத் தட்டிச் செல்லலாம்.

அதிர்ஷ்டமுள்ள மலேசியர்களுக்கு அடுத்தாண்டு முதல் மாதம் ஒன்றுக்கு 500 ரிங்கிட் வரை GM Klang நிறுவனத்தில் பொருட்களை வாங்க சலுகைகள் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தொடர்புத்துறை அதிகாரி நெர்சுஹைடா ஒஸ்மான் கூறினார்.

இப்பிரச்சாரத்திற்கு கிள்ளான் மாநகர மன்றமும் சிலாங்கூர் சுற்றுலா அமைப்பும் ஆதரவு கொடுக்கும் என அவர் தெரிவித்தார். இதன்வழி அடுத்தாண்டு GM Klang நிறுவனத்திற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரிக்கும் என்பதோடு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டை சிலாங்கூர் மாநிலத்திற்கு வருகை புரியும் ஆண்டாக ஊக்குவிக்கும் வகையில் இன்னும் அதிகமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதோடு இவ்வாண்டு GM Klang நிறுவனத்தின் 15ஆவது நிறைவு ஆண்டு கொண்டாடப்படவிருப்பதால் இந்நிறுவனத்திற்கு வருகை புரியும் அனைத்துலக சுற்றுப்பயணிகளுக்கு ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு பாடலை இது இவ்வாண்டு நவம்பர் மாதம் தொடங்கி டிக் டாக் வழி மேலும் விரிவாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம் சிலாங்கூர் மாநிலத்திற்கு மேலும் அதிகமான சுற்றுப்பயணிகளை வரவழைக்க முடியும் என்பதோடு கிள்ளான் மாநகர மன்றத்தின் சுற்றுலா தூதராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் GM Klang நிறுவனத்தின் பங்களிப்பு மேலும் வலுவூட்டப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் GM Klang நிறுவனம் மலேசிய சுற்றுலா நிறுவனத்தின் ஆண்டு இறுதி விற்பனைப் பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் GM Klang நிறுவனத்தின் மொத்த விற்பனையாளர்கள் வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 5ஆம் தேதி வரை தங்களின் மாபெரும் விற்பனையை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here