44 வீட்டு உடைப்புடன் தொடர்புடைய 4 வெளிநாட்டவர்கள் சுட்டுக் கொலை

கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 44 முறை புகுந்து கொள்ளை மற்றும் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நான்கு வியட்நாம் ஆண்கள், கோலாலம்பூர் ஜாலான் இம்பியில் உள்ள ஒரு வீட்டில் Op Tebuk சோதனையின் போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

நேற்றிரவு 11.30 மணியளவில் புக்கிட் அமான் மற்றும் கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த குழு ஒன்று கட்டிடத்தின் 17ஆவது மாடியில் உள்ள பிரிவை அணுகியபோது சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா உறுதிப்படுத்தினார்.

அவர்களைக் கைது செய்வதற்கான முயற்சியின் போது தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடந்தது. இதன் விளைவாக நான்கு சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அவர் இன்று அதிகாலை சம்பவ இடத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். போலீஸ் அதிகாரிகளைத் தாக்க பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இரண்டு கத்திகள் மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் ஆயுதம் ஏந்தியிருந்தது சோதனையில் தெரியவந்தது.

2018 ஆம் ஆண்டிலிருந்து நான்கு பேரும் கோலாலம்பூரில் 28 மற்றும் சிலாங்கூரில் 16 பேர்- 44  உடைப்பு வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்த இழப்பு 4.3 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் காலியாக உள்ள அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளை குறிவைத்து, இரவில் பெட்டகங்களை உடைத்து தாக்குதல் நடத்தியதாக ருஸ்டி மேலும் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்ரீ ஹர்தாமாஸில் நாங்கள் சோதனை செய்த இடத்தில் ஒளிந்து கொள்வதற்கு முன்பு அவர்கள் இதேபோன்ற குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சொகுசு குடியிருப்பை அவர்கள் தங்கள் குற்றங்களைத் திட்டமிடவும், ஓய்வெடுக்கவும், பிடியிலிருந்து தப்பிக்கவும் ஒரு தளமாகப் பயன்படுத்தியதாக நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

சந்தேகநபர்கள் அனைவரும் கடவுச்சீட்டை வைத்திருப்பதாகவும், அடிக்கடி நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்ததையும் அவர் உறுதிப்படுத்தினார். நான்கு பேருடன் தொடர்புடைய மற்றவர்களை அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here