சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தில் மோதல்: போக்குவரத்து போலிசாரைப் பணிசெய்ய விடாமல் தடுத்த 4 பேர் கைது!

கோலாலம்பூர்:

ஜோகூர் பாரு, சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தில் (BSI) ஆயுதங்களைப் பயன்படுத்தி மோதலில் ஈடுபட்டதுடன், கடமையிலிருந்த போக்குவரத்துப் போலீசாரைப் பணிசெய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக 3 உள்ளூர்வாசிகளும் ஒரு வெளிநாட்டவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 16 அன்று நள்ளிரவு 12.37 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த மோதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சண்டையை விலக்க முயன்ற இரு போக்குவரத்துப் போலீஸ் அதிகாரிகளிடம், வெளிநாட்டுச் சந்தேகநபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தேவையின்றி வம்பு இழுத்துள்ளார். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகி, ஆயுதங்களுடன் கூடிய மோதலாக மாறியது.

போலீசாரைப் பணிசெய்ய விடாமல் தடுக்கும் இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனைத் தொடர்ந்து, ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவு (D7) மற்றும் BSI போக்குவரத்துப் போலிஸார் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் 25 முதல் 46 வயதுக்குட்பட்ட 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

சோதனையின் போது, சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு தலைக்கவசம் மற்றும் ஒரு கத்தி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு 16 குற்ற மற்றும் போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நால்வருக்கும் ஆகஸ்ட் 17 முதல் 19 வரை 3 நாட்கள் நீதிமன்றத் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் பிரிவு 148 (ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல்) மற்றும் பிரிவு 186 (அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here