மாராங்கில் பல்நோக்கு வாகனம் (எம்பிவி) கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் இரண்டு விற்பனையாளர்கள் இறந்தனர். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) மாலை 4.30 மணியளவில் மாராங்கின் கம்போங் பாசிர் பூத்தே மெர்சாங்கிற்கு அருகே கோல தெரெங்கானு-குவாந்தான் சாலையின் 45ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது. பலியானவர்கள் அஹ்மத் ஃபரித் இஸ்வான் முகமட் (24) மற்றும் அவரது நண்பர் முஹம்மது அமீர் இக்மல் ஹாஷிம் (20) என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் சென்ற வாகனம் சறுக்கி மரத்தின் மீது மோதியதையடுத்து இந்த விபத்து ஏற்பட்டது.
மாராங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் சோபியான் ரெட்சுவான் கூறுகையில், விபத்து நடந்த நேரத்தில், வாகனம் கெமாமனில் இருந்து கோல தெரெங்கானுவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. நிசான் கிராண்ட் லிவினா ஒரு வளைவில் திரும்பும் போது இடதுபுறத்தில் உள்ள மரத்தில் மோதியதாக அவர் கூறினார். பின் இருக்கையில் இருந்த இருவருக்குமே தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஓட்டுநரான முஹம்மது ஷபிக் ஐசாத் யுசைனி 26, மற்றும் முன் பயணி, முஹம்மது ரஸ்லான் ரஷிதி அப்த் ரசாக் 19, ஆகியோர் காயத்துடன் தப்பினர்.
காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கோல தெரெங்கானுவில் உள்ள சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல் டுங்கன் மருத்துவமனையில் தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் கூறினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.