கோலாலம்பூர்:
மனைவியல்லாத ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததற்காக 42 வயது ஆடவருக்கு திரெங்கானு மாநிலத்தில் உள்ள பள்ளிவாசலில் அனைவர் முன் ஆறு பிரம்படிகள் கொடுக்கப்படும் என்று நேற்று (நவ.20) ஷாரியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த ஆடவர் ஐந்து பிள்ளைகளுக்கு தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய சமய சட்டத்தின்படி திருமணமாகாத ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பது குற்றமாகும்.
இக்குற்றத்தை அந்த ஆடவர் இதுவரை மூன்று முறை புரிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்படி விதிக்கப்பட்ட கட்டுமான ஊழியர், குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் அவருக்குப் பிரம்படியுடன் அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தீர்ப்பை எதிர்த்து அந்த ஆடவர் மேல்முறையீடு செய்யாத நிலையில், வரும் டிசம்பர் 6ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, அவருக்குப் பிரம்படி கொடுக்கப்படும் என்று திரங்கானு சட்டமன்ற உறுப்பினர் முகமட் கலில் அப்துல் ஹாடி தெரிவித்தார்.
வழக்கத்துக்கு மாறாக, பள்ளிவாசலில் உள்ள அனைவர் முன் பிரம்படி கொடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்,” என்று அவர் கூறினார்.