பேங்காக்:
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் மற்றும் அவர் குடும்பத்தின் ஆதரவுடன் செயல்படும் ஆளும் கட்சி மீது பதிவுசெய்யப்பட்ட புகாரை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தக்சினின் மகள் பெய்த்தொங்தார்ன் ஷினவாத் தலைமையிலான ஃபியூ தாய் கட்சியின் ஆட்சி தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியுள்ளது.
இவ்வேளையில் புகார்அவருக்கு எதிரான நிராகரிக்கப்பட்டது பெய்த்தொங்தார்னுக்கு நற்செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
சமூக ஆர்வலராக இருக்கும் வழக்கறிஞர் ஒருவர் சமர்ப்பித்த புகாரை நிராகரிக்கப்போவதாக நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 22) அறிக்கை ஒன்றில் அது தெரிவித்தது.
சீர்திருத்தக் கட்சியான மூவ் ஃபார்வர்ட் கட்சி கலைவதற்குக் காரணமாக இருந்த தீரயுத் சுவாங்கேசொர்ன், புகாரைத் தாக்கல் செய்திருந்தார். மன்னரின் தலைமையில் ஜனநாயக முறையில் செயல்படும் அந்நாட்டின் அரசாங்கக் கட்டமைப்பை மாற்றும் முயற்சியில் தக்சினும் அவர் ஆதரிக்கும் ஃபியூ தாய் கட்சியும் ஈடுபட்டுள்ளன என்பது தீரயுத் சுவாங்கேசொர்ன் குற்றச்சாட்டு.
அம்முயற்சிகளைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்பது அவரின் வாதம்.
இருமுறை தாய்லாந்துப் பிரதமராகப் பதவி வகித்த தக்சின், ஃபியூ தாய் கட்சியின் உறுப்பினர் இல்லை. எனினும், அவர் அக்கட்சியின் அதிகாரபூர்வமற்ற தலைவராகக் கருதப்படுகிறார்.
தாய்லாந்தின் ஆகப் பிரபலமான அரசியல் தலைவராக விளங்கும் திரு தக்சின், தனது ஆக இளைய மகளான பெய்த்தொங்தார்ன் ஷினவாத்தின் தலைமையில் அந்நாட்டு அரசாங்கம் எடுக்கும் பாதையை அமைப்பதில் குறிப்பிடத்தக்க வகையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பது பரவலான கருத்து.
நீதிமன்றத்தின் இந்த முடிவு, தாய்லாந்தில் அரசியல் நிலைத்தன்மை தலைதூக்கக்கூடும் என்ற அச்சத்தையும் அந்நாட்டில் முதலீட்டாளர்களிடையே பதற்றம் எழக்கூடும் என்ற கவலையையும் தணித்துள்ளது.
முன்னதாகப் பிரதமர் பதவி வகித்த ஸ்ரெத்தா தவிசினை அப்பொறுப்பிலிருந்து விலகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. தாய்லாந்து இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.