லோரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்திய மூவர் கைது

தஞ்சை:

லோரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தியதாக நம்பப்படும் மூன்று பேரை தஞ்சாவூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆந்திராவில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணிக்கு 330 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது.

வெள்ளிக்கிழமை அன்று பேராவூரணி அருகே காவல்துறையினர் வாகனச் சோதனை மேற்கொண்டிருந்த நிலையில், கஞ்சாவை ஏற்றி வந்த லோரி அவ்வழியே வந்தது. காவல்துறையினர் அந்த லோரியைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, முதலில் சந்தேகம் ஏதும் ஏற்படவில்லை.

எனினும் மீண்டும் சோதனையிட்டபோது லோரிக்குள் ரகசிய அறை அமைத்து 330 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த லோரியைப் பின்தொடர்ந்து வந்த காரில் இருந்த மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அத்தோடு லோரியில் போலிப் பதிவு எண் பலகைப் பயன்படுத்தப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த 52 வயதான கருப்பையா என்பவர் காவல்துறையால் தேடப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here