தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையர்நத்தத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்தக் கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொம்மிடி அருகே கோட்டமேடு கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்காக புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பொம்மிடி ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி, ஊராட்சி மன்றத் தலைவர் முருகனிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.
இதையடுத்து ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கோட்டைமேடு கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனால் எந்நேரமும் கடைக்கு மதுபாட்டில்களைக் கொண்டு வரக்கூடும் எனக் கருதி சனிக்கிழமை நவம்பர் 23ஆம் தேதி இரவு பொதுமக்கள் அப்பகுதியில் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 4வது நாளாகப் போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.