சரவாக், கூச்சிங்கைச் சேர்ந்த தனித்து வாழும் தாய், கம்போடியாவிற்கு கடத்தப்பட்டு, மோசடி நடவடிக்கைகளில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதால் கடுமையான துன்பத்தை தாங்க வேண்டியிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. கோஸ்மோ ஆன்லைன் கருத்துப்படி, நான்கு வயது மகனைக் கொண்ட நூர், தனது நண்பருடன் மூன்று மாதங்கள் கோலாலம்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்வதாக நம்பி ஜூன் 19 அன்று வீட்டை விட்டு வெளியேறினார்.
இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) அவர் தனது தாயிடம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்டதாகவும், மோசடி வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கூறினார். எனது மகள் வீங்கிய முகத்துடன் வீடியோ அழைப்பைச் செய்தார். அவரை அடித்து உதைத்து துன்புறுத்தலுக்கு ஆளானதோடு ஒரு வாரமாக உணவு இல்லாமல் கழிப்பறையில் அடைக்கப்பட்டதாகக் கூறினார். அவள் பலவீனமாக காணப்பட்டாள். அவள் கழிப்பறையில் தூங்க வேண்டியிருப்பதோடு உண்ண உணவு இல்லாமல் கழிப்பறையின் குழாய் தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டிருப்பதாக கூறியதாக பாதிக்கப்பட்டவரின் தாய் மேற்கோள் காட்டினார்.
காணாமல் போன தனது தாயைப் பற்றி தொடர்ந்து கேட்கும் பேரன் குறித்தும் தாய் வேதனை தெரிவித்தார். என் பேரன் எப்பொழுதும் அழுது கொண்டே, ‘என் அம்மா எங்கே?’ என்று கேட்கிறான். அவனுக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை. எனது மகளை காப்பாற்ற உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார். மலேசிய சர்வதேச மனிதாபிமான அமைப்பின் (MHO) பொதுச் செயலாளர் டத்தோ ஹிஷாமுதீன் ஹாஷிம், அதிகரித்து வரும் கடத்தல் அபாயங்கள் குறித்து பொதுமக்களை எச்சரித்தார். குறிப்பாக பாங்காக்கிற்கு பயணம் செய்யத் திட்டமிடும் எவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். மோசடி கும்பல்கள் பெருகிய முறையில் கொடூரமாகி வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களை இடைவிடாத சித்திரவதைக்கு உட்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.