ராஞ்சி:திருமணம் செய்யாமல் ‘லிவ்-இன்’ உறவில் இருந்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் 50 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள குந்தி மாவட்டத்தின் ஜோர்டாக் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா (வயது25). இவர் 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒரு கசாப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் திரும்பி உள்ளார்.திருமணமான இவர் அப்பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் தனது திருமணத்தை மறைத்து அந்த பெணணுடன் பழகி வந்த அவர் தனியாக அந்த பெண்ணுடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 8-ந்தேதி அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த பெண்ணை ஜோர்டாக் கிராமத்தில் தனது வீட்டருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துள்ளார்.
இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை கற்பழித்த நரேஷ் பெங்ங்ரா, அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து உள்ளார். பின்னர் அந்த பெண்ணின் உடலை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டி விட்டு காட்டில் விலங்குகளுக்கு வீசி சென்றுள்ளார்.
இந்த நிலையில் காட்டுப் பகுதியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக கிடந்துள்ளது. அவற்றை நாய்கள் கடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் போலீஸார் அங்கு விரைந்து சென்று பெண்ணின் உடல் துண்டு துண்டாக கிடந்ததை சேகரித்து விசாரணை நடத்தினர்.மேலும் சம்பவ இடத்தில் ஆதார் அட்டை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றி போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த பெண் அடையாளம் காணப்பட்டார்.
இதைத்தொடர்ந்து பெண்ணின் தாயாரை வரவழைத்து கொலை செய்யப்பட்ட பெண் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்தனர்.இதில் அந்த பெண் நரேஷ் பெங்ராவுடன் திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவில் இருந்ததும், சம்பவத்தன்று நரேஷ் பெங்ராவுடன் குடித்தனம் நடத்த போவதாக கூறி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் நரேஷ் பெங்ராவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டியதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.