லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. கடந்த, 14 மாதங்களாக நடந்து வந்த போர் நிறுத்தப்பட்டதால், புலம் பெயர்ந்த மக்கள், எல்லை பகுதிக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, கடந்தாண்டு அக்டோபரில் போர் துவங்கியது. இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த போர் உருவானது.
இந்நிலையில், அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது. இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஆதரவு அளித்து வரும் ஈரானும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
கடந்த 14 மாதங்களாக மும்முனை தாக்குதல்களை இஸ்ரேல் சந்தித்து வந்தது. ஒரு பக்கம் ஹமாஸ் அமைப்பை கட்டுப்படுத்திய நிலையில், கடந்த சில மாதங்களாக ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக்கியது. அதன் முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர்.
இந்த மும்முனை போரால், மேற்காசியாவில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் முயற்சிகள் மேற்கொண்டன.
இதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புகள் போரை நிறுத்துவதற்கு ஒப்புக் கொண்டன. இதற்கான உடன்பாடு ஏற்பட்டு, நேற்று முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.








