ஈரான் மீது தாக்குதல் நடத்த 2 வாரத் தடை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பாகிஸ்தான் சமரச முயற்சியால் போர் பதற்றம் தணிந்தது

வாஷிங்டன் | ஏப்ரல் 8, 2026

மத்திய கிழக்கில் பெரும் போர் மூளும் என்ற அச்சம் நிலவி வந்த நிலையில், ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் ராணுவத் தாக்குதல்களை அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மலேசிய நேரப்படி இன்று (புதன்கிழமை) அதிகாலை 6:32 மணியளவில் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் 14 நாட்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்கா உடன்பட்டுள்ளது. இது இருதரப்பு போர்நிறுத்தமாக (Bilateral Ceasefire) அமையும்.

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஆகியோருடன் நடத்திய தீவிரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே இந்த அமைதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஈரான் தரப்பிலிருந்து 10 அம்சத் திட்டவரைவு (10-point draft plan) ஒன்று அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டவரைவு அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு ஒரு வலுவான அடிப்படையாக இருக்கும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த காலச் சச்சரவுகளில் பெரும்பாலானவற்றிற்கு இரு நாடுகளும் ஏற்கனவே உடன்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு வார கால அவகாசம் முறையான அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகை அதிகாரிகள் அளித்துள்ள தகவலின்படி, அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்று இஸ்ரேலும் தனது குண்டுவீச்சுத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளது. இது மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதற்கான ஒரு முக்கிய அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த சர்வதேசக் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. (நேற்று கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 110 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here