சிரியாவில் வெடித்த உள்நாட்டு போர்?.. அலெப்போ நகரில் ரஷியா தாக்குதல்- 300 கிளர்ச்சியாளர்கள் பலி

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா அதிபராக பஷர் அல் அசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.

பஷரை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். ரஷிய அதிபர் புதின் தலையீட்டால் பஷர் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். போராட்டக்காரர்களை ஒடுக்க ரஷியா பஷருக்கு பேருதவி செய்தது.

2012 ஆம் ஆண்டுமுதல் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு அலெப்போ நகரை ரஷியா தனது விமானப்படை மூலம் மீட்டு 2016 ஆம் ஆண்டில் அதிபர் பஷர் அல் அசாத்திடம் மீண்டும் ஒப்படைத்தது. அதன் பிறகான காலத்தில் சிறிய அளவிலான எதிர்ப்பு ஆங்காங்கே போராட்டங்கள் என்ற அளவில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போராக மாறியுள்ளது.

முந்தைய போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் திடீரென மீண்டும் ராணுவத்துடன் சண்டையைத் தொடங்கியுள்ளனர். அமரிக்கா மற்றும் ஐநா சபையால் பயங்கரவாத அமைப்பாக வரையறுக்கப்பட்ட இதன் தலைவராக அபு முகமது அல்-கோலானி உள்ளார். முந்திய காலங்களில் அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது

இந்நிலையில் தற்போது வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் டசன் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அலெப்போவில் மையம் கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் மீது ரஷிய ராணுவம் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 300க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ நகர் வரலாற்றுக் காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here