ஜோகூர்பாரு:
முதலீட்டு மோசடியில் சிக்கிய 49 வயது நகைக்கடை ஊழியர் ஒருவர் 2.6 மில்லியன் ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார்.
சமூக ஊடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட அந்த முதலீட்டுத் திட்டத்தை நம்பி குறித்த பெண்மணி, இணையத்திலிருந்த இணைப்பினை கிளிக் செய்து, அதில் நுழைந்ததாக ஜோகூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, சிலர் அவரை அழைத்து அந்த முதலீட்டுத் திட்டம் பற்றி விளக்கமளித்தனர். அந்தத் திட்டத்தில் இணைந்தால் 9 விழுக்காடு லாபம் கிடைக்கும் என்று உறுதியளித்தனர். இதை நம்பிய பாதிக்கப்பட்ட பெண் முதலில் 100,000 ரிங்கிட்டை அந்தப் பெண் முதலீடு செய்தார். இதில் அவருக்கு 12,100 ரிங்கிட் லாபம் கிடைத்தது.
பின்னர் 2ஆவது முறையாக அவர் 2,656,600 ரிங்கிட்டை அந்த முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்தார். ஆனால் இம்முறை எந்த இலாபத்தையும் அவர் பெறவில்லை. அப்போதுதான் தான் மோசடிக்குள்ளானதை அந்தப் பெண் உணர்ந்தார் என்றும் , அதன் பின்னரே காவல்துறையிடம் புகார் செய்தார் என்றும் அவர் மேலும் கூறினார்.