கோலாலம்பூர்:
பத்து பூத்தே(பெர்டா பிராங்கா), மிடில் ராக்ஸ், சவுத் லெட்ஜ் ஆகியவற்றின் இறையாண்மையைக் கையாண்டது தொடர்பில் முன்னாள் பிரதமர் மகாதீரிடம் குற்றவியல் விசாரணையை நடத்த வேண்டும் என்று அரச விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மிகவும் வகைப்படுத்தப்பட்ட ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 415(பி), 417 மற்றும் 418 குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்கீழ் மோசடி உள்ளிட்ட விசாரணைக்கு அறிக்கை பரிந்துரை செய்தது.
விசாரணையைத் தொடங்குவதற்கு காவல்துறையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஆணையம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 19ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்படும் என்று அஸலினா உத்மான் கூறியிருந்தார்.
பிரதமர் அலுவலக அமைச்சரான அவர், (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) ஜூலை 31 அன்று முடிக்கப்பட்ட அறிக்கை ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகச் சொன்னார்.
பின்னர் ஆகஸ்ட் 28ஆம் தேதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
கடந்த ஜூன் 12ஆம் தேதி பத்து பூத்தே விவகாரம் தொடர்பில் ஆணையத்திடம் டாக்டர் மகாதீர் சாட்சியம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.